×

டோக்கன் எம்எல்ஏக்களை பிரசாரத்துக்கு வராமல் தடுக்க இலை கட்சி வேட்பாளர்கள் செய்யும் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியின் மாஜி தலைவரின் தோல்வியை கொண்டாட காத்திருக்கும், அதே வேட்பாளர்களை பற்றி என்ன சொல்வது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவையில் உள்ள மதுக்கரை நகராட்சியில் இலை வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்காம். தலைவர் பதவிக்கு ஆசைப்படும் வேட்பாளர் ஒருவர், வார்டு மாறி போட்டியிடுகிறார். 2 ஆண்டுகளாக வார்டை கண்டுகொள்ளாததால் அவர் மீது வாக்காளர்கள் கோபமாக இருக்காங்களாம். ஓட்டு கேட்க அந்த வார்டில் நடந்து செல்லக்கூட முடியலையாம். தோல்வி பயத்தில் அவர் மனைவியையும் வேறு ஒரு வார்டில் வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். தலைவரும், மனைவியும் தோத்து போயிருவாங்க, நாம ஜெயிச்சு தலைவராகலாம் என அந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் இலவு காத்த கிளி போல காத்திருக்கிறார்களாம். அப்படி அவர் தோற்றால் அது செய்கிறேன்.. இது செய்கிறேன் என்று பிரார்த்தனை வேறாம். அது மட்டுமில்லாமல், ஓட்டு கேட்கப்போன கரும்புள்ளி வேட்பாளர், வேட்பாளர்களிடம், திட்ட பணி பத்தி எல்லாம் கேட்காதீங்க, நாங்க ஓட்டுக்கு ஆயிரம் ரூவா தருவோம்.. அதை வாங்கிட்டு ஓட்டு போடுங்க என்று ஓப்பனாக கேட்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தலில் பங்காளிகளிடம் விலைபோன குக்கர் கட்சியினரை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெருவாரியான குக்கர் கட்சி வேட்பாளர்கள் தன்னுடைய பங்காளி கட்சியிடம் விலைக்கு போய்விட்டதாக தங்கள் கட்சியினரே வெளிப்படையாக பேசறாங்க. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும்போதே குக்கர் கட்சியினர் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லையாம். அப்போது சிலர் தங்கள் நண்பர்களிடம் நீங்கள் போட்டியிடுங்கள். தேர்தல் வேட்பு மனு முடிந்தவுடன் இலை கட்சியினர் கட்டாயம் நம்மிடம் பேச்சு வார்த்தைக்கு வருவாங்க. அப்போது நாம் பெறுவதை பெற்றுகொண்டு அமைதியாக இருப்போம். கட்சி தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்து என்ன சாதிக்க போகிறோம் என்று பேசியுள்ளனர். இதில் ஏங்க இப்டி பண்ணலாமா என்று கேட்டபோது கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்ட பொறுப்பில் இருந்த சில வேட்பாளர்கள் இலை கட்சி வேட்பாளர்களிடம் சில லகரங்களை பெற்றுக்கொண்டு தேர்தல் வேலை பார்ப்பதை தவிர்த்துவிட்டார்களாம். அந்த சில லகரங்களை கொண்டு தங்களது பெயர்களில் இடம் வாங்கி போட்டுள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டோக்கன் எம்எல்ஏக்களுக்கு ‘டேக்கா’ கொடுக்கும் உள்ளாட்சி வேட்பாளர்களின் எண்ணம்தான் என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கடைசி நேரத்தில் இலைக்கட்சி வேட்பாளர்களாக இருந்தவர்கள், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து மளிகை பொருட்கள், ஜவுளி எடுத்துக் கொள்ளலாம் என டோக்கன் கொடுத்தாங்களாம். அந்த டோக்கனை வைச்சு, ஒருவழியாக வெற்றியும் பெற்றுவிட்டார்களாம். கடைசி நேரத்தில் இலைக்கட்சியின் விவிஐபிக்கு நெருக்கமாக இருப்பவர் கொடுத்த ஐடியாவுல இதை சாதிச்சாங்களாம். இதனாலதான் 10 தொகுதிகளில் வெல்ல முடிஞ்சிதுனு இன்னும் இலை தரப்பு பேசிக்கிட்டிருக்கு. இப்படிப்பட்ட சூழலில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்து, பிரசாரம் சூடு பறக்கும் நிலையில், எங்கும் இலைக்கட்சி எம்எல்ஏக்களை காணவில்லையாம். முதல் ஓரிரு நாட்கள் பிரசாரத்துக்கு போனப்ப, நீங்க கொடுத்த டோக்கனை நம்பி ஓட்டு போட்டோம், ஆனா இன்னும் 5 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வந்து சேரலனு மக்கள் கேள்வி கேட்டாங்களாம். இதனால, எல்லா இலை கட்சி எம்எல்ஏக்களும் பிரசாரத்துக்கு போகாம வீடுகளில் முடங்கிட்டாங்க.. அத்துடன் பண செலவும், அலைச்சலும் மிச்சம் என்று பேசிக் கொள்கிறார்களாம். அதிலும் ஆத்தூர் பகுதி எம்எல்ஏக்களை தற்போது களத்தில் நிற்கும் இலை கட்சி வேட்பாளர்கள், தயவு செஞ்சு பிரசாரத்திற்கு வந்திறாதீங்க அண்ணேன்னு கையெடுத்து கும்பிட்டு சொல்லிட்டாங்களாம். எங்க அந்த ஆள் வந்து முகத்தை காட்டினா, விழுகிற ஓட்டும் பழைய டோக்கனை நினைச்சி விழாமா போயிருமுனு ரொம்பவே பயத்துல இருக்காங்களாம்… இப்படி தான் வார்டு தேர்தல்ல ஜெயிக்க எம்எல்ஏவுக்கே டேக்கா கொடுத்த சம்பங்கள் நிறைய நடக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ இலை கட்சியில் நடந்த மியூசிக்கல் சேர் விளையாட்டை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரை மாநகராட்சிக்கு போட்டியிடும் 100 இலை  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சேலம் விவிஐபி மதுரையில் பிரசாரம் செய்தார். வேட்பாளர்களை ஒரே இடத்தில், வரிசையாக அமர வைத்து, மேடையில் சேலம் விவிஐபியின் வலதுபுறத்தில் செருப்பு போட மாட்டேன் என்று சபதமெடுத்த மாஜி அமைச்சரும், இடதுபுறத்தில் தெர்மோகோல் மாஜி அமைச்சரும் உட்கார சேர் ஒதுக்கி இருந்தனர். வேட்பாளர்களை ஆதரித்து தெர்மோகோல் அமைச்சர் பேச எழுந்து சென்றபோது, எங்கேயோ நின்று கொண்டிருந்த மாஜி மாவட்ட செயலாளர் கிங், திடீரென்று வேகமாக வந்து அந்த சேரில் உட்கார்ந்து கொண்டார். அப்போது, பேசி முடித்த தெர்மோகோல் மந்திரி, எனக்கு உட்கார சேர் இல்லை என்று புலம்பியபடி நின்றாராம். இதனையறிந்த சேலம் விவிஐபி, பேச எழுந்தார். உடனே அவர் இருக்கையில் தெர்மோகோல் மாஜி அமைச்சர் அமர்ந்தாராம். ஆனால், கடைசி வரை தெர்மோகோலை மியூசிக்கல் சேர் போல இடம் கொடுக்காமல் கிங் ஆனவர் விளையாட்டு காட்டியதை அங்கிருந்தவர்களும், மேடையில் இருந்தவர்களும் பார்த்து பார்த்து சிரித்தனர். ஆனால், தெர்மோகோல்காரரோ, தனக்கு ஒதுக்கிய சேரில் நமது எதிரி உட்கார்ந்துவிட்டாரே என்ற கோபத்தில் அவர் முகம் நிகழ்ச்சி முடியும் வரை சிவந்தே காணப்பட்டதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post டோக்கன் எம்எல்ஏக்களை பிரசாரத்துக்கு வராமல் தடுக்க இலை கட்சி வேட்பாளர்கள் செய்யும் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Token ,Leaf party ,wiki Yananda ,Peter ,
× RELATED 10 மாநிலங்களில் சிபிஐ ரெய்டு